×

திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிஐஎஸ்எப் சோதனையால் பரபரப்பு

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மர்மநபர் ஒருவர், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். அதில், திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும், 4 இடங்களில் இந்த வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு, வருகை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஏர்போர்ட் பகுதி முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
விமான நிலையம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனால் நேற்று காலை 10 மணி முதல் விமான நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

The post திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிஐஎஸ்எப் சோதனையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,CISF ,Trichy ,Central Industrial Security Force ,Trichy International Airport.… ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்